1000

குடியரசுத் தலைவரின் உரை

225

Get real time updates directly on you device, subscribe now.

மோடி அரசின் தோல்விகளை மூடிமறைக்கும் ஒப்பனை!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

மோடி அரசின் தோல்விகளை மூடிமறைத்து ஒப்பனை செய்வதாக குடியரசுத் தலைவர் உரை அமைந்திருக்கிறது.

நாடு சந்தித்து வரும் சமூக, பொருளாதார சிக்கல்கள் எதுபற்றியும் குடியரசுத் தலைவர் குறிப்பிடவோ அவற்றுக்குத் தீர்வு காண்பதைப் பற்றிப் பேசவோ இல்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது.

கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து முழுஅடைப்பு அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் விவரிக்கமுடியாத வேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். புலம்பெயர்த் தொழிலாளர் பிரச்சினை என்பது இன்னும் தீர்க்கப்படாததாகவே இருக்கிறது. அதைப்பற்றி குடியரசுத் தலைவர் எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை. கொரோனாவால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். உலகில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களுடைய எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இதைப்பற்றி குடியரசுத் தலைவர் உரையில் எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருக்கும் வேளாண்துறையில் அத்துமீறி, எவ்வித கலந்தாலோசனைகளையும் செய்யாமல், தன்னிச்சையாக நாடாளுமன்ற நடைமுறைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்து3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த உண்மையை மூடிமறைத்து இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என்பதைப்போல குடியரசுத் தலைவர் கூறியிருக்கிறார். எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியிருப்பதாக ஆளும் கட்சி கூறிவரும் கூற்றை வழிமொழிந்துள்ள குடியரசுத் தலைவர், அதற்காக ஒரு சட்டம் கொண்டுவரவேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏன் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது என்பதை விளக்கவில்லை.

சீனா நமது நாட்டின் சில பகுதிகளில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்திருக்கிறது, அருணாச்சல பிரதேசத்தில் வீடுகளைக் கட்டியிருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படி நமது நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்டிருக்கும் சவாலைப் பற்றியோ அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதைப் பற்றியோ குடியரசுத் தலைவர் உரையில் எந்தவொரு குறிப்பும் இல்லை.

கடந்தாண்டு இவ்வாறு உரை நிகழ்த்தும் போது கிராமப்புற பகுதிகளின் மேம்பாட்டுக்காக 25 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று குடியரசுத் தலைவர் அறிவித்தார். ஆனால் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத் துறையை ஒழித்துக் கட்ட சட்டம் கொண்டு வந்ததுதான் தற்போதைய ஆட்சியின் சாதனையாக உள்ளது. அதுபோலவே இப்போதைய உரையும் அரசாங்கத்தினுடைய நடைமுறைக்கு மாறாக இருப்பது மட்டுமின்றி அரசாங்கத்தின் தோல்விகளை மூடிமறைக்கும் ஒப்பனையாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் குடியரசுத் தலைவர் உரையில் நம்பிக்கை தரும் செய்திகள் இடம்பெறுவதற்குப் பதிலாக ஆளுங்கட்சியினுடைய அரசியல் பிரச்சாரமாகவே அவரது உரை அமைந்துவிட்டது ஏமாற்றமளிக்கிறது.

இவண்:தொல்.திருமாவளவன்

நிறுவனர் – தலைவர்,விசிக.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.