1000

அறவழியில் போராடும் விவசாயிகள் மீது அரசுப் பயங்கரவாத ஒடுக்குமுறை!

250

Get real time updates directly on you device, subscribe now.

உள்துறை அமைச்சர் வன்முறைக்குப் பொறுப்பேற்று பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கவேண்டும்!

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

குடியரசு நாளான இன்று உரிய அனுமதி பெற்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் வன்முறை வெறியாட்டம் நடத்திய பாஜக அரசின் ஆணவப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இனியும் தாமதிக்காமல் வேளாண் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற்று விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு பிரதமர் மோடியை வலியுறுத்துகிறோம்.

மோடி அரசு இயற்றிய மூன்று வேளாண் விரோத சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிசெய்யும் சட்டம் ஒன்றை இயற்றக் கோரியும் கடந்த நவம்பர் 28 முதல் டெல்லி எல்லைப்பகுதிகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் கூட எவ்வித வன்முறைக்கும் இடம் தராமல் கட்டுப்பாடு காத்து அறவழியில் உறுதியாக அந்தப் போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் பிரதிநிதிகளோடு பத்து முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் மத்திய அரசு கொஞ்சம்கூட இறங்கி வராமல் பிடிவாதம் செய்யும் காரணத்தினால்தான் இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவதற்கு விவசாயிகள் அனுமதி கோரினர். முதலில் அனுமதி மறுத்த மத்திய அரசு பின்னர் அவர்களுடைய உறுதியான நிலைப்பாட்டைக் கண்டு வேறுவழியில்லாமல் அனுமதி அளித்தது. அனுமதி அளிக்கப்பட்ட பாதையில் லட்சக்கணக்கான டிராக்டர்களில் இன்று விவசாயிகள் பேரணியாகச் சென்றனர். அப்போது ஒரு சில இடங்களில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைப் பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் காவல்துறையினர் அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் பலர் சிதறி டெல்லி நகரின் மையப் பகுதியை நோக்கி ஓட நேர்ந்தது. அப்படி போனவர்களில் சிலர் செங்கோட்டையில் தேசியக் கொடியை கையில் ஏந்திப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். குடியரசு தினத்தில் நடந்துள்ள இந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் அனைத்துக்கும் மோடி அரசின் பிடிவாதப்போக்கும் மெத்தனப் போக்குகளுமே காரணமாகும்.

விவசாயிகள் மீது அதிகார மமதையுடன் ஆணவப்போக்குடன் ஒடுக்குமுறையை ஏவியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கவேண்டும். வறட்டுப் பிடிவாதம் பிடிக்காமல் மோடி அரசு அந்த மூன்று வேளாண் விரோத சட்டங்களையும் உடனே திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் அமைதியாகத் திரும்ப ஆரம்பித்து விட்டனர் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே கிழக்கு டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் இணையதள சேவைகளை மத்திய அரசு முடக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பழிவாங்கும் நோக்கில் விவசாயிகள் மீது மூர்க்கமான தாக்குதல் எதையும் மத்திய அரசு தொடுக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறோம். இதுவரை நேரிட்ட அத்தனை உயிரிழப்புகளுக்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகிறோம்.

இவண்:தொல்.திருமாவளவன்,

நிறுவனர் – தலைவர்

விசிக.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.