1000

பட்ஜெட்-2021

230

Get real time updates directly on you device, subscribe now.

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட்!

மோடியின் கார்ப்பரேட் அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்!

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளையும் விற்கப்போவதாக நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புச் செய்துள்ளார்.பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட நாட்டின் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் மக்கள் விரோத பட்ஜெட் இது.

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வேளாண்துறை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான கூடுதல் வரி (செஸ்)ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள்மீது தாங்கமுடியாத அளவுக்கு வரிச்சுமையை ஏற்றுகிறது. நாட்டை விலைபேசி விற்பதாகவும், மக்களின்மீது வரிச்சுமையைக் கூட்டுவதாகவும் உள்ள இந்த பட்ஜெட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் யூரியா மீது கூடுதல் வரியை விதித்து மேலும் அவர்களை வாட்டிவதைக்க முடிவு செய்திருக்கிறது இந்த அரசு. அதுமட்டுமின்றி மின்விநியோகத்தைத் தனியாரிடம் கொடுப்பதென்ற முடிவு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ஒழித்துக்கட்டுவதற்கான தொடக்கமே ஆகும்.

எல்ஐசியின் பங்குகளை விற்கப் போவதாகக் கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார்கள். இப்போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்திலும் 74% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

எஸ்சி எஸ்டி மக்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்டத்தை முற்றாகக் கைவிட்டுவிட்ட பாஜக அரசு, அவர்களுக்கான ஒதுக்கீட்டையும் கணிசமாகக் குறைத்துவிட்டது. எஸ்சி மாணவர்களுக்கு ‘போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தைக் கைவிட பாஜக அரசு முடிவுசெய்தபோது அதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டும்தான் போராடியது. அதன் விளைவாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசு ஆரவாரத்தோடு அறிவித்திருக்கும் ‘தேசிய கல்விக்கொள்கையை’ நடைமுறைப்படுத்த ‘ஜிடிபி’யில் 6% ஒதுக்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால், அதில் பாதியளவுகூட இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உயர்கல்வி முழுவதையும் மத்திய அரசின் கையில் எடுத்துக்கொள்வதறாகன அறிவிப்பே இந்த பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 24 கோடி பேர் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை முற்றிலுமாக இந்த பட்ஜெட்டிலும் ஒதுக்கி வைத்துவிட்டனர்.

கொரோனா பெருந்தொற்றினால அதிகம் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் நலன்களுக்காகவும்கூட எந்தவொரு அறிவிப்பும் இல்லை.

மாத சம்பளம் பெறுவோர் வருமான வரியில் சலுகை வழங்கப்படும் என ஆவலோடு காத்திருந்தனர். அவர்களின் ஆசை நிராசையாகிவிட்டது.

பாஜக அரசின் இந்த பட்ஜெட்டில் ஆப்பிள் பழத்தின்மீது 35% கூடுதல் வரியும், கொண்டைக்கடலைமீது 50% கூடுதல் வரியும், சமையல் எண்ணெய் மீது 20% கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து ஏழை எளிய மக்கள் மேலும் அவதிக்குள்ளாகும் நிலையே ஏற்படும்.

பட்ஜெட்டில் 3% பற்றாக்குறை மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால் இந்த பட்ஜெட்டில் 9.5% பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது சுமார் 15 லட்சம் கோடி அளவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த பற்றாக்குறையை சமாளிக்கவே நாட்டின் சொத்துகளை விற்கவும், மக்கள்மீது ‘கூடுதல் வரி’ விதிக்கவும் இந்த அரசு முடிவுசெய்துள்ளது. இந்த பட்ஜெட்டின்மூலம் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்குமேயொழிய குறையாது.

வழக்கம்போல வெகுமக்கள் விரோத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள பாஜக’வின் கார்ப்பரேட் அரசுக்கு எமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்:தொல்.திருமாவளவன்,நிறுவனர்- தலைவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.