20 ஆம் நூற்றாண்டில் துணிந்த மாவீரன் மேலவளவு முருகேசன் – தொல்.திருமாவளவன் உரை

141

20 ஆம் நூற்றாண்டில் துணிந்த மாவீரன் மேலவளவு முருகேசன்:

– தொல்.திருமாவளவன்

~~~~~~~~~~~~~~~~~~~~

1997ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஊராட்சி மன்றத் தலைவரானதால் முருகேசன் உள்ளிட்ட எழுவர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினார். தற்போது ஆயிரக்கணக்கான தலித் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உருவாகி இருப்பதற்கு எழுச்சித்தமிழர் அவர்கள் அன்று நடத்திய போராட்டங்களே காரணம். ‘விடுதலை களம்’ என்னும் நினைவிடத்தை மேலவளவில் விசிக சார்பில் தலைவர் எழுச்சித்தமிழர் கட்டிஎழுப்பினார். 25 ஆண்டுகளாக ஜுன் 30 அன்று மேலவளவிற்கு சென்று முருகேசன் உள்ளிட்ட 7 போராளிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி வருகிறார்.

இன்று மேலவளவில் அரசியல் உரிமை போராளிகளுக்கு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் வீரவணக்கம் செலுத்தி வீரவணக்க உரையாற்றினார்.

உரையின் ஒரு பகுதி:

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவு ஊராட்சி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டு முருகேசன் என்ற ஒரு இளைஞர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக எனக்கு தகவல் வந்தது.

அப்போது நமது தோழர்கள் முருகேசனை கொண்டு வந்து எனக்கு முன்னால் நிறுத்தினர். அவரைப் பார்த்ததும் நான் வியப்படைந்தேன் அப்படிப்பட்ட ஒரு கம்பீரமான தோற்றம் கொண்டவராக முருகேசன் இருந்தார். அப்போதுதான் முதன் முதலாக முருகேசனை நான் சந்தித்தேன். அவரிடம் நான் சொன்னேன் ஏன் தம்பி இந்த விபரீத முடிவு அந்த ஆதிக்க சாதியினர் தேர்தலில் தலித்துகள் யார் நின்றாலும் அவனின் தலையை வெட்டி வீசுவோம் என்று ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்து இருக்கிறார்களே என்று சொன்னேன்.

உடனே தம்பி முருகேசன் ஆவேசமாக சொன்னார் பரவாயில்லை அண்ணா என் தலையே போனாலும் பரவாயில்லை இந்த தேர்தலில் நான் கண்டிப்பாக நிற்பேன் என்று துணிச்சலுடன் சொன்னார். இந்த சமூக மக்களின் அரசியல் உரிமைக்காக என் தலையே போனாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை அண்ணா என்று சொன்னார். நான் உண்மையில் வியப்படைந்து போனேன்.

அண்ணா நான் உங்களை தேடி வந்திருப்பது ஒரு நிபந்தனைக்காக தான் என்று என்னிடம் கேட்டார். நான் என்ன என்று கேட்டேன்‌‌. உங்கள் கட்சி சார்பில் என்னை எதிர்த்து ஒருவர் வேட்டுமனு தாக்கல் செய்திருக்கிறார் அவரை வாபஸ் வாங்க செய்தால் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று சொன்னார். அப்போதுதான் முருகேசன் திமுக கட்சியை சேர்ந்தவர் என்று எனக்கு தெரியவந்தது. உடனே நமது கட்சியை சேர்ந்த அந்த தம்பியை அழைத்து நீங்களும் நின்றால் ஓட்டு சிதறிவிடும். எனவே நீங்கள் மனுவை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் முருகேசன் எளிதாக வெற்றி பெறட்டும் என்று சொல்லி அனுப்பினேன். அந்த தம்பியும் என் சொல்லுக்கு கட்டுப்பட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றுவிட்டார்.

திரும்பவும் நான் முருகேசனை பார்த்து கேட்டேன் தம்பி நீ நின்றால் கண்டிப்பாக அவர்கள் கொலை செய்ய முயற்சி செய்வார்கள். கொஞ்சம் இன்னும் ஒருமுறை யோசித்து முடிவெடுக்கலாம் என்று சொன்னேன். பரவாயில்லை அண்ணா எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள் அது போதும் எனக்கு என்று சொல்லி, தேர்தலில் நின்றார் வெற்றியும் பெற்றார்.

ஏன் இதை இங்கே சுட்டிக்காட்டி பேசுகிறேன் என்று சொன்னால் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று தெரிந்தே துணிந்தே முருகேசன் தேர்தலில் நின்றார். அவர்கள் என்னை கொலை செய்தாலும் பரவாயில்லை இந்த மக்களின் அரசியல் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று துணிச்சலுடன் முடிவெடுத்தார்.

இப்படிப்பட்ட ஒரு மாவீரனை நான் கண்டதில்லை. தேர்தலில் தலித்துகள் யார் நின்றாலும் அவன் தலையை வெட்டுவோம் என்று ஆதிக்க சாதினர் கூட்டம் போட்டு முடிவு செய்த பிறகும் அதை அறிந்தும் பலர் பலமுறை முருகேசனிடம் சொல்லியும் கேட்காமல் துணிச்சலுடன் தேர்தல் நின்று வெற்றி பெற்று சாதித்துக் காட்டியவர் மாவீரன் முருகேசன். இந்த 20-ம் நூற்றாண்டில் சிறந்த மாவீரன் என்று சொன்னால் அது மேலவளவு முருகேசன் தான்.

முருகேசன் தலையை ஆதிக்க சாதியினர் வெட்டி விழித்திருந்தாலும் அவன் பெற்று கொடுத்த அரசியல் உரிமை இன்னும் இங்கு நிலைத்திருக்கிறது என்பதை எண்ணி நான் பெருமை கொள்கின்றேன். தலித் மக்களின் அரசியல் உரிமைக்காக தலைகொடுத்த மாவீரன் தம்பி முருகேசன் உள்ளிட்ட ஏழு போராளிகளுக்கும் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகின்றேன்.

மதுரை, மேலவளவு விடுதலைகளம் முன்பு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி!

Leave A Reply

Your email address will not be published.