மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம் : தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை வரவேற்று  வழிமொழிகிறோம்!

136

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமரை வலியுறுத்தியிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று வழிமொழிகிறோம். இந்தியக் கூட்டாட்சியை வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தி இருப்பது போல ஆண்டுக்கு மூன்று முறை மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விசிக சார்பில் இந்தியப் பிரதமரைக் கேட்டுக்கொள்கிறோம்.

அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்- 263 மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் ஒன்றை அமைக்கவேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் அந்த கவுன்சில் 1990ஆம் ஆண்டு தான் அமைக்கப்பட்டது. இத்திய ஒன்றிய அரசு மற்றும்  மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகள் குறித்த ‘சர்க்காரியா ஆணையத்தின்’  பரிந்துரை அடிப்படையில், அது ஒரு நிலையான அமைப்பாக இந்தியப் பிரதமரின் தலைமையில் நிறுவப்பட்டது. ஒன்றிய அரசின் அமைச்சர்கள், மாநிலங்களின்  முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2006 ஆம் ஆண்டு அந்த கவுன்சிலின் 10 ஆவது கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் 10 ஆண்டுகள் வரை அந்தக் கூட்டம் நடைபெறவில்லை. இந்தியப் பிரதமராக திரு.நரேந்திரமோடி அவர்கள் பொறுப்பேற்றதற்குப் பிறகு,  2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி அவரது தலைமையில் அக்கவுன்சிலின்
11 ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக
திரு. ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் கலந்து கொள்ளாததைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அன்றைய தலைவர் கலைஞர் அவர்கள் அப்போது கடுமையாக விமர்சித்தார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் இறுதியில் பேசிய பிரதமர் அவர்கள், பூஞ்சி ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து மாநில முதலமைச்சர்கள் கூறிய கருத்துகளைக் கவனத்தில் கொள்வதாகவும், இது ஒரு நல்ல தொடக்கம் என்றும், இதுகுறித்து இந்திய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் அதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை.

திரு. நரேந்திர மோடி அவர்கள் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு ஒன்றிய அரசு நிறைவேற்றிவரும் பல சட்டங்கள் மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும், மாநில மக்களுக்கு தீங்கிழைப்பதாகவும் அமைந்துள்ளன என்பதையும், அந்த சட்ட மசோதாக்கள் போதுமான அளவில் விவாதிக்கப்படவில்லை என்பதையும் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஜிஎஸ்டி சட்டம் குறித்த தீர்ப்பில் “ இந்தியக் கூட்டாட்சி என்பது மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் எப்போதும் ஒருங்கிணைந்து உரையாடக்கடிய இடமாகும்” என உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து இங்கு  நினைவுகூரத் தக்கதாகும். அத்தகைய ஆரோக்கியமான உரையாடல் நடக்கவேண்டும் என்பதற்காகவே,  “மாநிலங்கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எந்த ஒரு சட்ட மசோதாவையும் மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டத்தில் வைத்து விவாதித்து அதன்பிறகே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று தனது கடிதத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார். கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கவும் மாநில உரிமைகளை மீட்கவும் இந்த கவுன்சில் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவது இன்றியமையாததாகும்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்தக் கோரிக்கையை ஏற்று உடனடியாக மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என இந்தியப் பிரதமரை வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முன்முயற்சிக்கு அரசியல் வேறுபாடுகள் கடந்து அனைத்துக் கட்சிகளும் ஆதரவு நல்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்:
தொல் திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

Leave A Reply

Your email address will not be published.