பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் தொல்.திருமாவளவன் போராட்டம்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தீவுத்திடலில் இருந்து மாட்டு வண்டி ஒட்டியபடி மெமோரியல் ஹாலுக்கு ஊர்வலமாக வந்தார். மேலும் இரண்டு மாட்டுவண்டிகளில் விடுதலைச் சிறுத்தைகளின் நிர்வாகிகள் வந்தனர் அதில் ஒரு மாட்டுவண்டியில் மூன்று சக்கர வாகனத்தை (ஆட்டோ) ஏற்றி முழக்கங்களை எழுப்பியபடியே பேரணியாக வந்தனர்.
பின்னர் மெமோரியல் ஹால் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் 18-வது முறையாக பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். மாநில அரசும் பெட்ரோல் மீதான வரியை குறைத்தால் ஓரளவு விலை குறையும். எனவே மாநில அரசும் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல் விலை உயர்வால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் ஓட்ட முடியாத கற்கால நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் வன்னியரசு,மடிப்பாக்கம் வெற்றிசெல்வன்,எஸ்.எஸ்.பாலாஜி, இரா. செல்வம், இளஞ்செழியன், இளங்கோ உள்பட விடுதலைச் சிறுத்தைகளின் முண்ணனி பொறுப்பாளர்களுடன் ஏராளமான விடுதலைச் சிறுத்தைகளும் கலந்துக்கொண்டனர்.
