• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நாடாளுமன்ற உரைகள் » தருமபுரி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் எழுச்சித் தமிழர் பேச்சு! அதிமுக எதிர்ப்பு! அவை ஒத்திவைப்பு!

தருமபுரி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் எழுச்சித் தமிழர் பேச்சு! அதிமுக எதிர்ப்பு! அவை ஒத்திவைப்பு!

தருமபுரி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் எழுச்சித் தமிழர் பேச்சு! அதிமுக எதிர்ப்பு! அவை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மக்களவையில் இன்று (18-12-2012) காலை கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரம் (சீரோ ஹவர்) தொடங்கியது. அவசர நிலையின் அடிப்படையில் பொதுப் பிரச்சனைகள் குறித்து நடைபெற்ற இவ்விவாதத்தின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்பாகப் பேசினார். அப்போது, தர்மபுரியில் நடைபெற்ற சாதி வெறியாட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசியபோது அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சல் போட்டனர். தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்த நிலையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் மக்களைத் தலைவர் திருமதி மீராகுமார் திடீரென அவையை ஒத்திவைத்தார். இவ்விவாதத்தில் திருமாவளவன் பேசியதாவது- “மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே, இவ்வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்கள் சுமார் 25 கோடிக்கு மேலானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்திய அரசும் சட்டமும் தங்களைப் பாதுகாக்கும் என்கிற நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நாடு விடுதலை பெற்று 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. குறிப்பாக, ஒரு சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் சிறீகாகுளம் மாவட்டத்தில் லட்சுமிப்பேட்டை என்னும் கிராமத்தில் மாலா எனும் தலித் மக்கள் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் பயிர் செய்தார்கள் என்பதற்காக காப்புரெட்டி எனும் உயர்ந்த சாதியினர் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. நான் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று அம்மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தேன். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தருமபுரி அருகே நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று கிராமங்கள் அண்மையில் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டன. சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சாதிவெறியர்கள் பட்டப்பகலில் திரண்டு அந்த கிராமங்களில் பிற்பகல் 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் சுமார் 6 மணி நேரம் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொத்துக்களைக் கொள்ளையடித்து பின்னர் வீடுகளுக்குத் தீ வைத்தனர். 6 மணி நேரம் இத்தகைய தாக்குதல் நடந்தும்கூட தமிழ்நாடு காவல்துறை அதைத் தடுப்பதற்கு எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் தலித் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. ஆட்சி நிர்வாகம் செயலிழந்து கிடக்கிறது. (இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சல் போட்டனர்) தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு சிலர் திட்டமிட்ட வன்முறையைத் தூண்டி வருகின்றனர். எனினும் காவல்துறை வேடிக்கை பார்த்து வருகிறது.” (இந்நேரத்தில் மக்களவைத் தலைவர் திருமதி மீரா குமார் அவர்கள் அதிமுக உறுப்பினர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அவையை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு அவையிலிருந்து வெளியேறிவிட்டார்.)

Print Friendly

About The Author

Number of Entries : 603

Comments (1)

Leave a Comment

© 2011 all rights reserved to VCK

Scroll to top