பெருந்தலைவர் மக்கள் கட்சி நடத்திய கூட்டத்தில் எழுச்சித்தமிழர்
தமிழகப் பள்ளிகளில் அளிக்கப்படும் மதிய உணவு திட்டம் காமராஜர் கொண்டு வந்தது அல்ல என சட்டசபையில் அமைச்சர் வளர்மதி பேசினார். இதை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களும் ஆமோதித்து பேசினார். இதனை கண்டித்து இன்று மாலை 6 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் வளர்மதி மற்றும் முதலவர் ஜெயலலிதா அவர்களின் இந்த உரையை அவைக் குறிப்பிலிருந்து எடுக்க வேண்டும், அமைச்சர் வளர்மதியை பதவியிலிருந்து நீக்கம் செய்ய போன்ற கோரிக்கைகளை முன்வைத்து என்.ஆர்.தனபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கண்டன கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சென்னை வந்து கலந்துக்கொண்டார். இக்கூட்டத்தில் கண்டன உரையாற்றிய தொல்.திருமாவளவன் அவர்கள் “காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தின் மூலம் பள்ளியில் படித்தவன் நான். இன்று வரலாறு தெரியாதவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், வசந்தகுமார், குமரி அனந்தன், சற்குண பாண்டியன், காதர் மைதீன், மயிலை பெரியசாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
