• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » அஞ்சலிகள் » ஆந்திர மாநிலம் சிறீகாகுளத்தில் சாதி வெறியர்கள் நடத்திய கொடூரமான தாக்குதல்களில் 5 பேர் படுகொலை – தொல்.திருமா நேரில் வீரவணக்கம்(காணொளி)

ஆந்திர மாநிலம் சிறீகாகுளத்தில் சாதி வெறியர்கள் நடத்திய கொடூரமான தாக்குதல்களில் 5 பேர் படுகொலை – தொல்.திருமா நேரில் வீரவணக்கம்(காணொளி)

ஆந்திர மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம் லட்சுமிப்பேட்டையில் ஒடுக்கப்பட்ட மாலா சமூகத்தினர் மீது காப்பு சமூகத்தைச் சேர்ந்த சாதி வெறியர்கள் நடத்திய கொடூரமான தாக்குதல்களில் 5 பேர் படுகொலை

சிறீகாகுளத்தில் எழுச்சித் தமிழர் கண்டன உரை
ஆந்திர மாநிலம் சிறீகாகுளம் மாவட்டத்தில் உள்ள லட்சுமிப்பேட்டை என்னும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சேரிவாழ் மக்களான மாலா சமூகத்தினர் மீது அங்குள்ள காப்பு என்கிற சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறியர்கள் ஒன்றுகூடி மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி 5 பேரை படுகொலை செய்துள்ளனர்.  மேலும் பலரை கொடூரமாகத் தாக்கி ரத்தக் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். இந்தக் கொடூரமான காட்டுமிராண்டித் தாக்குதலைக் கண்டித்து சிறீகாகுளத்தில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு எழுச்சித் தமிழர் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
லட்சுமிப் பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளமையான நீர்ப்பிடிப்புள்ள நிலங்கள் உள்ளன.  அரசுக்குச் சொந்தமான சுமார் 250 ஏக்கர் நிலங்களில் தலித் மக்களான மாலா சமூகத்தினர் சுமார் 60 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்தி வந்தனர்.  மீதமுள்ள 190 ஏக்கர் நிலத்தை மொத்தமாக காப்பு என்கிற ஆதிக்க சமூகத்தினர் பயன்படுத்தி வந்துள்ளனர்.  இந்நிலையில் தலித் மக்கள் பயன்படுத்திவரும் 60 ஏக்கர் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்துடனும், உள்ளூர் பஞ்சாயத்து ஊராட்சி மன்றத் தலைவியாக தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் சகித்துக்கொள்ள முடியாமலும் திட்டமிட்டு இத்தகைய கொடூரமான தாக்குதல்களை சாதிவெறியர்கள் நடத்தி 5 பேரை படுகொலை செய்துள்ளனர்.  இந்தத் தாக்குதலில் பலர் காயமுற்று விசாகப்பட்டினத்தில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இத்தகைய சாதிவெறியாட்டத்தைக் கண்டிக்கும் நோக்கத்துடன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களிடையே களப்பணியாற்றிவரும் மல்லாள வெங்கட்ராவ் பல்வேறு தலித் அமைப்புகளை ஒருங்கிணைத்து சிறீகாகுளத்தில் கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து  எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை கண்டன உரையாற்ற அழைப்பு விடுத்திருந்தார்.
அதனையொட்டி கடந்த 9-7-2012 அன்று தமிழகத்திலிருந்து எழுச்சித் தமிழர் அவர்களும், அவருடன் தனிச்செயலாளர் கு.கா. பாவலன், அரசு ஊழியர் அய்க்கியப் பேரவையின் மாநிலத் துணைச் செயலாளர் இளந்திரையன், மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகளின் பொறுப்பாளர்கள் ஐதராபாத் சுனில், விஜயவாடா வெங்கட்ரமணா ஆகியோரும் உடன் சென்றனர்.
10ந்தேதி காலை விசாகப்பட்டினத்திலுள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எழுச்சித்தமிழர் சந்தித்து தாக்குதல் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்து சுமார் 2 மணி நேரம் பயணம் செய்து லட்சுமிப் பேட்டை கிராமத்தைச் சென்றடைந்து அங்கு படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.  அங்குள்ள தலித் மக்களிடம் வீடு வீடாகச் சென்று தாக்குதல் குறித்து விசாரித்து அவர்களுக்குத் தைரியமூட்டினார்.
படுகொலையான 5 பேரும் அடக்கம் செய்யப்பட்ட, ஊருக்கு ஒதுக்குப்புறமான வயல்வெளிப் பகுதிக்கு நடந்தே சென்று வீரவணக்கம் செலுத்தினார்.  அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு சிறீகாகுளத்தில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதன் சுருக்கம்”படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ. 10 லட்சமும், ஒவ்வொரு தலித் குடும்பத்திற்கும் 5 ஏக்கர் நிலமும் வழங்க வேண்டுமென்பதுடன், மாநிலக் காவல்துறை இந்த வழக்கை நடத்தினால் குற்றவாளிகளைத் தப்ப விட்டுவிடுவார்கள்.  ஆகவே, இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.  இப்படுகொலை தொடர்பாகவும், தலித் மக்களுக்கு நிலம் வேண்டியும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவேன்.  ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்துகிடக்கும் வரையில் நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது.  இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். ஆகவே நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் சாதிவெறியர்கள் அச்சப்படுவார்கள்.  எந்த அரசியல் கட்சியும் நம்மைப் பாதுகாக்காது.  நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.
நிலம், வீடு, பொன், பொருள், ஆடு, மாடு எப்படி சொத்துக்களோ அதைப்போலவே அரசியல் அதிகாரமும் ஒரு சொத்து ஆகும்.  ஆகவே நாம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். தேள் எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்ள திருப்பிக் கொட்டுகிறதோ, பாம்பு எப்படி திருப்பிக் கொத்துகிறதோ, நாயைச் சீண்டியவுடன் எப்படிப் பாய்ந்து கடிக்கிறதோ, மாட்டைத் தொட்டவுடன் அது பாய்ந்து எப்படி முட்டுகிறதோ அதைப் போல நாம் எப்போது திருப்பித் தாக்குகிறோமோ அப்போதுதான் நமக்குப் பாதுகாப்பு.
இந்தியா முழுவதிலுமிருந்து தலித்துகள் 5 பேர் படுகொலை, 10 பேர் படுகொலை என செய்தி வருகிறதே தவிர, மற்ற சாதியைச் சேர்ந்தவர்கள் 5 பேர் படுகொலை, 10 பேர் படுகொலை என செய்தி வருகிறதா?” – இவ்வாறு எழுச்சித் தமிழர் தம் பேச்சில் குறிப்பிட்டார்.
இறுதியாக விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கை முழக்கமான ‘அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி’ என்று முழக்கம் எழுப்பி அங்கே கூடியிருந்த மக்களை அடக்குமுறைக்கு எதிராக உசுப்பினார்.
எழுச்சித் தமிழர்கள் அவர்கள் தமிழில் எழுச்சிகரமாக ஆற்றிய கண்டனஉரையை ஐதராபாத் சுனில் அவர்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்தார்.  தலைவர் அவர்களின் எழுச்சிகரமான கண்டன உரை அங்கு கூடியிருந்தவர்களிடையே சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியை உருவாக்கியது.
http://youtu.be/nvQgIbMcF-I

எழுச்சித்தமிழருக்கு முன்னதாக உரையாற்றிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ‘சமதா சைனிக் தள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடசாமி, “எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிதறிக் கிடக்கின்ற அனைத்து தலித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து தலைமை தாங்க வேண்டும்.  அதற்குரிய ஆற்றலும் தகுதியும் அவருக்கு இருக்கிறது.  குறைந்தபட்சம் தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய தலித் தலைவர்களை ஒருங்கிணைத்து அவர் தலைமை தாங்கவேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

Print Friendly

About The Author

Number of Entries : 603

Leave a Comment

© 2011 all rights reserved to VCK

Scroll to top