ஜூலை 3, *_தூத்துக்குடியில்…_*
*தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு:*

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் போராடிய பொது மக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க பொது கூட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று (3-7-2018) தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இந்தக் பொது கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த தலைவர் தொல்.திருமாவளவன்  அவர்களை செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும். அந்த ஆலையை நாட்டில் எந்த இடத்திலும் அனுமதிக்கக் கூடாது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடியும், அரசு வேலையும் வழங்கிட வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்குப் பல்வேறு நோய்கள் பரவி வருவதாலும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டதாலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சிலர் மூலைச்சலவை செய்தனர் என்று கூறுவது துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் திசை திருப்பும் முயற்சியாகும். அவர்களை எந்த அமைப்பும் மூளைச் சலவை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நியாயமான கோரிக்கைக்காக மக்கள் போராடிய போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் காவல் துறையும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் சேர்ந்து அவ்வாறு அவதூறு பரப்பி வருகின்றன.

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து ஜூலை 17-ம் தேதி திருவண்ணாமலையிலும், 20-ம் தேதி சேலத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பொதுமக்களின் கருத்துகளை அறிந்து அவர்களின் இசைவு பெற்ற பிறகே திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.