ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை ரத்து செய்து இருப்பது இஸ்லாமியர்க ளுக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிகளில் ஒன்றாகும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள் ளார்.

சென்னை வருகை புரிந்துள்ள குஜராத் மாநில வத்காம் தொகுதியின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து பேசினார்

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலுக்கு வருகை புரிந்த ஜிக்னேஷ் மேவானிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தம்மை சந்தித்து பேசிய மேவானி தலித் அரசியல் குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தார். பிரதமர் நரேந்தர மோடி தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு சாதாரண மக்களின் அதிருப்திக்கு ஆளாகிவிட்டார் என குற்றம் சாட்டினார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது சிங்களரின் தமிழின விரோத போக்கை காட்டுகிறது என குற்றம்சாட்டினார். ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை ரத்து செய்து இருப்பது இஸ்லாமியர்க ளுக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிகளில் ஒன்றாகும் என்றும் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார்.

கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும் அவரை கண்டிப்பது எச்.ராஜாவின் விளம்பரம் தேடும் போக்கை காட்டுகிறது என்றும் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, சுவராஸ்யமான தலைவர் தொல்.திருமா வளவனை சந்திப்பதில் மகிழ்ச்சி என்றும் இந்திய முழுக்க சுற்றுப்பயணம் செய்து ஜனநாயக சக்திகளை ஒன்றணைத்து மதசார்பற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறேன் அந்த அடிப்படையில் இந்த சந்திப்பின் நடைபெற்றது என தெரிவித்தார். இது போன்று ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பதால் தம்மை சங்கபரிவார அமைப்புகள் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுடனான தமது சந்திப்பை நிறைவு செய்த ஜிக்னேஷ் மேவானி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.