வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை காப்பாற்ற அவசர சட்டம் இயற்ற வேண்டும்! 
மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்
~~~~~~~
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான தனது தீர்ப்புக்கு தடை விதிக்கவோ அந்த வழக்கை விரிவான அமர்வுக்கு அனுப்பவோ நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான இரண்டு பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு மறுத்துவிட்ட நிலையில் அந்த சட்டத்தைக் காப்பாற்ற அவசர சட்டம் இயற்ற வேண்டுமென மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

 

இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் அந்த தீர்ப்பில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி
தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் அதை விரிவான அமர்வு ஒன்றுக்கு அனுப்ப வேண்டுமெனக் கோரினார். ஆனால் நீதிபதி ஏ.கே.கோயல் அதற்கு மறுத்துவிட்டார்.அதுமட்டுமின்றி தாங்கள் வழங்கிய தீர்ப்பு சரியானது தான் என்றும் அவர் கூறியுள்ளார். விசாரணை 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் மேலும் சில தன்னார்வ அமைப்புகளின் சார்பிலும் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் புதிதாக எந்த ஒருவரையும் இதில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்க முடியாதென்று நீதிபதி கூறி அதை நிராகரித்து விட்டார்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் முடக்கப்பட்ட இந்த இரண்டுமாத காலத்தில் வன்கொடுமைகள் எந்த அளவுக்கு அதிகரித்திருகின்றன என்பதை மத்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அது மட்டுமின்றி அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி பாஜக அணியில் உள்ள இராம்விலாஸ் பாஸ்வான், அத்வாலே, உதித்ராஜ் உள்ளிட்டோரும் அழுத்தம் தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்.

நிறுவனர் – தலைவர்,
விசிக.