ரமலான் பெருநாள்:  
மனிதநேயத்தின் மூலம் மதவாத அரசியலை வேரறுக்க உறுதியேற்போம்!
விடுதலைச்சிறுத்தைகள் அறிக்கை!
—————————————————
இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் நபிகள்நாயகத்தின் வழியில் புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து  தமது கடமையை ஆற்றுவது போற்றுதலுக்குரியதாகும். நோன்பிருந்து தொழுகை செய்வது இறைவனுக்குச் செய்யும் கடமை என்றாலும், அது உடல் மற்றும் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதற்கும் செழுமைப்படுத்துவதற்குமான ஒரு வாழ்வியல் நெறிமுறையாக விளங்குவதையும் அறியமுடிகிறது.
பண்பாட்டு ரீதியாக இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் ஒற்றுமையாக அணிதிரள்வதற்கு ரமலான் நோன்பு ஏதுவாக அமைவதையும் காணமுடிகிறது. மேலும், மானுடத்தின் மேன்மையை வலுப்படுத்தும் மனிதநேயம் என்னும் மாண்பினை இது செழுமைப்படுத்துகிறது. சாதி மத வரம்புகளைத் தாண்டி ஏழை எளியோருக்கு கொடையளிக்கும் கருணையையும் இந்த நோன்பு மேம்படுத்துவதை உணரமுடிகிறது.
இத்தகைய சிறப்புக்குரிய நோன்பை நிறைவுசெய்யும் திருநாளான ரமலான் பெருநாளில் இஸ்லாமியர் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன், மனிதநேயத்தை செழுமைப்படுத்துவதன் மூலம் மதவாத வெறுப்பு அரசியலையும் வன்முறைக் கலாச்சாரத்தையும் வேரறுக்க இந்நாளில் உறுதியேற்போம்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.