பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாளை சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேருந்து கட்டணம் குறித்து ஆட்சியாளர்களின் கருத்து ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார். மேலும் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, நாளை சென்னையில் தமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார். வரும் 24ம் தேதி பிற மாவட்ட தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், வரும் 27ம் தேதி திமுக நடத்தும் போராட்டத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்று கூறினார். மேலும் ஆண்டாள் குறித்த விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவை கீழ்த்தரமாக விமர்சிப்பது உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்