தூத்துக்குடி படுகொலைகள்
அனைத்துக்கட்சி ஒன்றுகூடல்
தீர்மானங்கள்
—————————————

நாள்: ஜுன் 20 2018
ஒழுங்கு: நாம்- சென்னைவாழ் தூத்துக்குடி நெல்லை குமரி மக்களின் ஒருங்கிணையம். —————————————-

1. தூத்துக்குடி
ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கெதிரான அறவழிப் போராட்டத்தின் போது காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் உடனிருப்பையும் பதிவு செய்கிறோம்.

2. அவ்வாறே கடுமையான காயங்கள் மனச் சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எமது தோழமை உடனிருப்பையும் பதிவு செய்கிறோம்.

3. தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடந்த வன்முறையும் கொலைகளும் தமிழக காவல்துறை மீதான பொது மதிப்பையும் நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. இதனைச் சரி செய்வது அரசு மற்றும் காவல்துறை தலைமையின் கடமையாகும். உண்மைகளை மறைக்கவும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட அதிகாரிகளை காப்பாற்றவும் வேண்டி அரசு இப்போது கடைபிடிக்கிற கெடுபிடி அணுகுமுறை மக்களுக்கும் காவல்துறைக்கும் இடைவெளியியை மேலும் அதிகரிக்கும். இந்த அணுகுமுறையை கைவிட்டு தவறிழைத்த அதிகாரிகள் அனைவர் மீதும் உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு உட்படுத்துவதும் வழக்கு முடியும்வரை அவர்களை பணி இடைநீக்கம் செய்வதுமே மக்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தும்.

4. இயல்பு நிலை கொணரும் நம்பிக்கைச் செயற்பாடுகளை விடுத்து நள்ளிரவுத் தேடுதல் வேட்டை, பொது மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மீது வரைமுறையற்ற வழக்குகள் பதிவுசெய்தல் போன்றவை தொடர்வது அராஜகம் ஆகும். அரசின், காவல்துறையின் இப்போக்கினை வன்மையாக கண்டிக்கும் அதே வேளை பொதுமக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாகத் திரும்பபெற தமிழக அரசை வலியுறுத்தி வேண்டுகிறோம்.

5. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மட்டுமே அரசு காயமுற்றவர்களாகக் கணக்கில் எடுத்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களையும் கணக்கெடுப்பது முக்கியம். குறிப்பாக இனிமேல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத அளவுக்கு பலர் காயமடைந்துள்ளனர். காயமுற்றோர் எண்ணிக்கை, காயங்களின் தன்மைகள் பற்றின சிறப்பு வெள்ளை அறிக்கை வெளியிடவும் காயங்களுக்கேற்றபடி சிறப்பு நிவாரண உதவி அறிவிக்கவும் இந்த ஒன்றுகூடல் கேட்டுக்கொள்கிறது.

6. அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் ஆதரவாளர்களையும் மிரட்டி அச்சுறுத்தும் வண்ணம் பல்வேறு வழக்குகள் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. வரைமுறையின்றி பலர் கைதுசெய்யப்பட்டும்
உள்ளார்கள்.
மே 22 முதல் இன்று வரை கைதுசெய்யப்பட்டவர்கள் யார், எக்காரணங்களுக்காக, என்ன பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அவ்வழக்குகளுக்கான அடிப்படை முகாந்திரங்கள் என்ன, கைதுசெய்யப்பட்டுள்ளது எத்தனை பேர் , எங்கு அவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் போன்ற அனைத்து விபரங்களையும் சிறப்பு அறிக்கையாக உடனே வெளியிட இந்த ஒன்றுகூடல் கேட்டுக்கொள்கிறது.

7. ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடியதை வரவேற்கிறோம். ஆனால் மீண்டும் தீறக்கப்பட முடியாத பிரிவுகளின் கீழ் பொருத்தமான ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும். மட்டுமின்றி திடீரென அங்கு சல்பியூரிக் ஆசிட் கசிவு என செய்தி கசியவிட்டு மீண்டும் மின் இணைப்புவேண்டுமென ஸ்டெர்லைட் நிர்வாகம் கொரியுள்ளதானது குறுக்குவழியில் ஆலையை செயல்படவைக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முயற்சிக்கிறதோ என்ற ஐயப்பாட்டை அதிகரித்துள்ளது. இந்த ஐயப்பாடுகளுக்குத் தெளிவைத் தர வேண்டியது அரசின் கடமையாகும்.

8. துப்பாக்கிச்சூட்டை ஏதுவாக்கிய 144 தடை ஆணை இன்னும் மர்மமாகவே உள்ளது. உடனடியாக அந்த ஆணையின் நகல் வெளியிடப்படவேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்தும்முன் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளை துச்சமெனக் கருதி படுகொலை வேட்டை நடத்தியுள்ள காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்து அவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

9. வளர்ச்சியின் அடிநாதம் மக்களே- கார்ப்பரேட்டுகள் அல்ல. அவ்வகையில் நிலம்- நீர்- காற்று- வெளி இவற்றை கட்டின்றி மாசுபடுத்துகிற எந்த தொழில்முயற்சியும் ஏற்புடையதல்ல. புற்றுநோய் கொள்ளைநோய்போல் காணக்கிடைக்கும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டுமல்லாது பிற தொழிற்சாலைகளையும் சூழல் தணிக்கைக்கு உள்ளாக்கவேண்டுமென இந்த ஒன்றுகூடல் கேட்டுக்கொள்கிறது.

10. ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடியவர்கள் மீதும் அம்மக்களுக்கு ஆதரவாகப் போராடியவர்கள் மீதும்- குறிப்பாகத் தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் மீதும், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பினர் மீதும் தேசப் பாதுகாப்பு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பது அராஜகமானது. அப்பிரிவுகளிலான வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறக் கேட்டுக்கொள்கிறோம்.

11. பாதிக்கப்படும் மக்களுக்காகக் குரல்கொடுத்துப் போராடுவது அரசியற்கட்சிகளின் அறக் கடமை. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடியில் நடத்த திட்டமிட்ட பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது ஜனநாயக விரோதச் செயலென்றால் கூட்டத்திற்கு இத்தனபேர்தான் வரவேண்டும், இத்தனைபேர்தான் பேச வேண்டும், இவ்வளவு நேரம்தான் பேசவேண்டும் என்றெல்லாம் நீதிமன்றமும் உத்தரவிட்டிருப்பது கவலை தரும் ஒன்றாகும். அரசமைப்பின் அடக்குமுறை உந்துதல்களை தடுத்தாளும் ஜனநாயக ஆற்றல் மையமாகவே நீதிமன்றங்களை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.

12. தூத்துக்குடி மக்கள் காவல்துறையின் அப்பட்டமான வன்முறைகளுக்கு உள்ளாகியபோது மக்களோடு மக்களாக நின்ற தூத்துக்குடி- மதுரை வழக்கறிஞர் சமூகத்தையும் வரைமுறையின்றி நடைபெற்ற கைதுகளை அக்கட்டத்தில் தடுத்து நிறுத்திய நீதித்துறை அதிகாரிகளையும் இந்த ஒன்றுகூடல் வணங்கிப் போற்றுகிறது.

13. மக்கள் சார்பாக நின்று போராடுகிறவர்களை தீவிரவாதிகள்- பயங்கரவாதிகள் என முகாமைப்படுத்தும் போக்கினை அரசும் காவல்துறையும் சில ஊடகங்களும் செய்துவருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆயுதம் தாங்காமல், வன்முறையைத் தூண்டாமல், இந்திய அரசியல் சட்ட நெறிமுறைகளுக்குள்
தீவிரமாகச்
செயல்படும்வரை எவரும் தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ அல்ல என்பதை சுட்டிக்காட்ட விழைகிறோம்.

14. கார்ப்பரேட்- தனியார் திட்டங்களுக்கெதிரான மக்கள் போராட்டங்கள் வலுத்து வரும் இன்றைய சூழலில் வளர்ச்சி- Development பற்றின பொதுவிவாதத்தை அரசே முன்னெடுக்க அழைக்கிறோம். இயற்கையோடு மல்லுக்கட்டாமல் இயற்கையை செழுமை செய்யும் வளர்ச்சிக்
கொள்கை இன்றைய காலத்தின் கட்டாயம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

15. தூத்துக்குடியில் நடந்தேறி வரும் காவல்துறை தொடர் அராஜகங்களும், இப்போது சேலத்தில் ஜனநாயகரீதியான போராட்டக்காரர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறை வழக்குகளும் எதிர் குரலே இங்கு இருக்கக்கூடாது என்ற பாசிச அணுகுமுறைக்கு மாநில அரசும் ,ஒரு தொகுதிகூட வெல்லாமல் மாநிலத்தின் முக்கிய முடிவுகளை இயக்கும் மத்திய அரசும் வந்துவிட்டதையே காட்டுகிறது. இது அனைத்து ஜனநாயக அரசியற் கட்சிகளுக்கும், சக்திகளுக்கும் , பொதுமக்களுக்கும் விடப்படுகின்ற வெளிப்படையான அறைகூவல். இதை எதிர்கொண்டு முளையிலேயே கிள்ளி எறியத் தவறினால் நாம் கொடுக்கவேண்டிய விலை மிகப்பெரியதாக இருக்கும். எனவே களத்தில் போராடுகிறவர்களும், அரசியல் ஒத்த கருத்துடைய கட்சிகளும், ஜனநாயகம் போற்றுகிற பொதுமக்களும் குருட்டு சர்வாதிகாரம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிற மாநில- மத்திய அரசுகளை தடுத்து நிறுத்த மாபெரும் ஒன்றிணைந்த ஜனநாயக எழுச்சி இயக்கம் காணவேண்டுமெனவும் இந்த ஒன்றுகூடல் அவசர அழைப்பு விடுக்கிறது.

பங்கேற்ற தலைவர்கள்.

அரும் தலைவர் ஐயா திரு. நல்லக்கண்ணு, தி.மு.க சார்பில் திரு. TKS இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் திரு. பீட்டர் அல்போன்ஸ், திரு. தாமோதரன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் திரு. தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு தலைவர் திரு. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் தமிழ்நாடு தலைவர் திரு. முத்தரசன், ம.தி.மு.க சார்பில் திரு. மல்லை சத்யா, நீதியரசர் திரு. ஹரி பரந்தாமன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் திரு. கலி பூங்குன்றன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் திரு. ஜவஹிருல்லா, SDPI கட்சித் தலைவர் திரு. தெஹலான் பாகவி, அனைத்திந்திய முஸ்லீம் லீக் பொதுச்செயலர் திரு. நிசாமுதீன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திரு. வாலிதாசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைத்தலைவர் திரு. சிங்கராயர், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் திரு. இனிகோ இருதயராஜ், “நாம்” அமைப்பின் தலைவர் திரு. தேவசகாயம் IAS Rtd, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர் தலைவர் திரு. ராஜேந்தர் பிராங்கோ, சென்னைவாழ் தூத்துக்குடி- நெல்லை மக்கள் சார்பில் தோழர் திரு. வீரக்குமார், தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் திரு. பிச்சைமுத்து, பன்னாட்டுத் தமிழ் அமைப்புகளின் சார்பில் திரு. விசாகன், சென்னைவாழ் குமரி மக்கள் சார்பில் திரு. றசல் மற்றும் Fr. ம. ஜெகத் கஸ்பார்.

 

 

 

 

 

 

 

ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

துப்பாக்கி சூடு நடத்திய அரசு அதிகாரிகளையும்
காவல் துறையினறையும் உடனடியாக கைது செய் !

தோழர் வேல்முருகன் உள்ளிட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்.!

தோழர் பெ.மணியரசன் அவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடு !

பாரத் மாலா பெயரால் போடப்படும்
எட்டுவழிச் சாலைத் திட்டத்தை உடனடியாக கைவிடு.

இந்தியத்தின் பெயரால் தமிழக வனங்களை
நாசமாக்கும் அழிவு திட்டங்களைத் தமிழ்கத்தில்
இருந்து அப்புறப்படுத்து !

என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னணி முன்னைடுத்த பொதுக்கூட்டம் சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடைப்பெற்றது.

இப்பொதுகூட்டத்தில் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

துப்பாக்கி சூடு நடத்திய அரசு அதிகாரிகளையும்
காவல் துறையினறையும் உடனடியாக கைது செய் !

தோழர் வேல்முருகன் உள்ளிட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்.!

தோழர் பெ.மணியரசன் அவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடு !

பாரத் மாலா பெயரால் போடப்படும்
எட்டுவழிச் சாலைத் திட்டத்தை உடனடியாக கைவிடு.

இந்தியத்தின் பெயரால் தமிழக வனங்களை
நாசமாக்கும் அழிவு திட்டங்களைத் தமிழ்கத்தில்
இருந்து அப்புறப்படுத்து !

என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னணி முன்னைடுத்த பொதுக்கூட்டம் சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடைப்பெற்றது.

இப்பொதுகூட்டத்தில் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.