திருச்சியில் விசிக வணிகர் அணி மாநில மாநாடு – 6 தீர்மானங்கள்

…………….

திருச்சியில் இன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைத் திரும்பப் பெறுக

ஒரே நாடு ஒரே வரி என்ற பெயரில் மத்தியில் ஆளும் பாஜக அரசால் திணிக்கப்பட்டிருக்கும் ‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சிறு வணிகர்களை முற்றாக அழித்துக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாஜக அரசின் பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையால் விழிபிதுங்கிக் கொண்டிருந்த வணிகர்கள், அவர்களின் ஒப்புதலின்றி திணிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் மூச்சுத் திணறிக்கொண்டுள்ளனர். ஒரே வரி எனக் கூறப்பட்டாலும் பல அடுக்கு வரிகள் போடப்படுகின்றன. அதுமட்டுமின்றி கூடுதல் வரிகளும் (செஸ்) விதிக்கப்படுகின்றன. உலகில் எந்த நாட்டிலும் இத்தகைய கடுமையான வரிவிதிப்பு முறை கிடையாது. இதனால் வணிகர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைத் திரும்பப் பெறவேண்டுமென மத்தியில் ஆளும் பாஜக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

2. சட்டத்துக்குப் புறம்பான ஆன் லைன் வர்த்தகத்தை தடைசெய்க!

ஆன் லைன் வர்த்தகத்தில் இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அன்னிய நேரடி முதலீட்டு விதிகளுக்குப் புறம்பாக அவை ஏராளமான தள்ளுபடிகளை அவ்வப்போது அறிவிப்பதால் சில்லறை வணிகம் மிகப்பெரிய நட்டத்தை சந்தித்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசிடம் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை அதைத் தடுப்பதற்கு பாஜக அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சட்டத்துக்குப் புறம்பான ஆன் லைன் வர்த்தகத்தைத் தடுத்து நிறுத்துமாறு இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

 

3. சிறு வணிகர்களுக்கு கடன் உதவி வழங்குக!

பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையாலும், ஜிஎஸ்டி வரிவிதிப்பாலும் பெரும் நெருக்கடியைச் சந்தித்துவரும் சிறு வணிகர்களுக்கு பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நகை வியாபாரிகளுக்கும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் கடன்களை எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் வழங்குகின்றன.அவர்கள் வங்கிகளை மோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டே ஓடுகின்றனர். பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகளும் சிறு வணிகர்களுக்குக் கடன் வழங்க முன்னுரிமை அளிப்பதற்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

4. நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களின் உற்பத்தியை தடை செய்க

எளிதில் மட்காத நெகிழிப் பொருட்களால் மண் வளமும், நீர் வளமும் பாதிக்கப்படுவதோடு மக்களுக்கு எண்ணற்ற நோய்களும் வருகின்றன. நெகிழிப் பொருள் உற்பத்தி குறித்து அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் அவை சரியாகக் கடைபிடிக்கப்படுவதில்லை. அதைக் கண்காணிப்பதற்கான கட்டமைப்பு வசதியும் அரசிடம் இல்லை. உற்பத்தி செய்யும் இடத்தில் விட்டுவிட்டு நெகிழி பொருட்களைப் பயன்படுத்துவதாக வணிகர்களை அரசு அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள். எனவே நெகிழியால் பை, தேநீர் குவளைகள் முதலானவற்றைத் தயாரிப்பதற்கு தடை விதிக்கவேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

5. வாடகையை முறைப்படுத்துக

நகராட்சி, மாநகராட்சி, அறநிலையத் துறை கடை வாடகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. உணவகங்கள், கடைகளில் உருவாகும் குப்பைக்கு குப்பை வரி விதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி உருவாகும் குப்பைகளை வணிக நிறுவனங்களே மறுசுழற்சி செய்யவேண்டும் என  வலியுறுத்தப்படுகிறது. இதனால் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் முறைப்படுத்திட தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

6. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு கூடாது

சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படிச் செய்தால் சிரு வணிக முற்றாக அழிந்துவிடும். இந்தியா முழுவதும் அதை நம்பியுள்ள கோடிக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும். எனவே அந்த ஆபத்தான முயற்சியில் ஈடுபடவேண்டாமென மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

https://www.youtube.com/watch?v=y_aJnyQQ0-Y&t=4s