தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்க!
தமிழக அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் !
~~~~~~~~~~~~

தூத்துக்குடியில் காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் திரு. வேல்முருகன் அவர்களைத் தூத்துக்குடி விமான நிலையத்திலேயே கைது செய்து சிறைப்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

 

 

ஆயுதமில்லா அறவழியில் போராடிக்கொண்டிருந்த உழைக்கும் மக்கள்மீது தமிழ்நாடு அரசின் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானவர்கள் துப்பாக்கிச்சூட்டிலும் தடியடியிலும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லவேண்டியது பொதுவாழ்க்கையில் உள்ளவர்களின் கடமையாகும். அந்தவகையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு. வேல்முருகன் அவர்கள் தூத்துக்குடிக்குச் சென்றபோதுதான் அவரைக் கைதுசெய்துள்ளனர். ஒருநாள் முழுவதும் அங்கே ஒரு மண்டபத்தில் அடைத்துவைத்திருந்து அடுத்தநாள் புழல் மத்திய சிறைக்குக் கொண்டுபோய் ஏற்கனவே பதிவாகியிருந்த வழக்கொன்றில் தளைப்படுத்தியுள்ளனர்.

 

பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல்
கட்சிகளின் தலைவர்கள் ஏராளமானோர் தூத்துக்குடிக்குச் சென்று மக்களைச் சந்தித்துள்ளனர். ஆனால், திரு வேல்முருகன் அவர்களை மட்டும் தடுத்திருப்பது திட்டமிட்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகும். தமிழகத்தில் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருவதால் அவரை அச்சுறுத்துவதற்காகவே இத்தகைய நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவருவருகிறது.

 

தமிழக அரசின் இந்த ஃபாசிசப் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன், திரு. வேல்முருகன் அவர்களையும் அவருடைய கட்சியினரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.