ஜாக்டோ-ஜியோ அமைப்பினரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்!
தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
~~~~~~~~~~~~~~~~

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பலர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு அவர்களை அழைத்துப் பேச வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தைத் தொடர வேண்டும்; ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; தொகுப்பு ஊதியம், மதிப்பு ஊதியம் ஆகியவற்றின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; அரசு ஊழியர்களின் பணி இடங்களைக் குறைக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் – என்ற ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று பலபேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் போராடி வரும் அரசு ஊழியர்களை அழைத்து தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

போராடும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் யாவும் குரல் கொடுத்துள்ள நிலையில், தமிழக அரசு வறட்டுப் பிடிவாதம் செய்வது சரியல்ல. இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்,
விசிக.