காஞ்சி மக்கள் மன்றம்  ஏற்பாட்டில்   04-05-2018  அன்று  காஞ்சிபுரம் பெரியார் நினைவுதூண் அருகில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை வழங்கினார் .

 

 

#காவி பயங்கரவாதம் என்பது என்னவென்று தெரிந்து கொண்டால் தான் அதை எதிர்ப்பதற்கு அம்பேத்கரியம் எந்த வகையிலே தேவைப்படுகிறது. பெரியாரியம் எந்த வகையிலே தேவைப்படுகிறது. மார்க்சியம் எந்த வகையிலே தேவைப்படுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அம்பேத்கரியம் வேறு பெரியாரியம் வேறு மார்க்சியம் வேறு என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். அடிப்படையில் அவை வெவ்வேறானவை அல்ல. மார்க்சியம் தொழிலாளர் நலனை முன்னிறுத்தி முதலாளித்துலச் சுரண்டலை எதிர்த்துப் போராட வழிகாட்டுகிறது. முதலாளித்துவம் என்கிற கோட்பாடு தான் முதலாளித்துவம் என்கிற அரசியல் தான் முதலாளியம் என்கிற கருத்தியல் தான் உழைக்கும் மக்களை கொடூரமாக சுரண்டுகிறது என்பது தான் மார்க்சியம். இந்தியாவைப் பொறுத்தவரை முதலாளித்துவம் என்பது பார்ப்பனியமாக இருக்கிறது அல்லது இந்துத்துவமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பெரியாரியம் இங்கே முதலாளித்துவத்தை பார்ப்பனியம் என்று சொல்லுகிறது. அம்பேத்கரியம் இங்கே முதலாளித்துவத்தை சாதியம் என்று சொல்லுகிறது. இரண்டும் வேறுவேறானவையல்ல.

பார்ப்பனியம் தான் இங்கே முதலாளித்துவமாக வலுப்பெற்றிருக்கிறது. பார்ப்பனிய சக்திகள் தான் முதலாளிகளாக இருக்க முடியும். முதலாளித்துவ ஆதிக்கத்தை செலுத்த முடியும். வேறு எந்த நாட்டிலும் இல்லாத ஒரு சமூக உறவு இந்தியாவில் தான் இருக்கிறது. அதுதான் இங்கே இந்துத்துவமாக பார்ப்பனியமாக சாதியமாக இருக்கின்றது.

ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் வர்க்கம் அல்லது உழைக்கும் வர்க்கம் அவர்களை ஆண்டுகொண்டிருக்கின்ற முதலாளி வர்க்கம் அல்லது ஆளும் வர்க்கம் என்கிற வர்க்கப் பிரிவினை தான் மேலோங்கியிருக்கின்றது. அங்கே சமூக ரீதியான முரண்கள் மிகப்பெரிய அளவில் முதன்மை முரண்களாக இல்லை.

ஆங்கிலத்தில் BASIC FACTORS, PRIMARY FACTORS என்று உண்டு. PRIMARY FACTORS என்பதுதான் முதன்மையான கூறுகள் அல்லது முதன்மையான முரண்கள். சமூகத்திலே ஏராளமான பிரச்சனைகள் இருக்கும். சாதியம் ஒரு பிரச்சனை. ஊழல் ஒரு பிரச்சனை. மொழி ஒரு பிரச்சனை. பெண்களுக்கெதிரான கொடுமைகள் ஒரு பிரச்சனை. இவையெல்லாம் BASIC FACTORS. சமூகத்தில் பரவிக்கிடக்கிற அடிப்படையான சில முரண்கள். ஆனால் அந்தந்த காலத்திற்கேற்ப சூழலுக்கேற்ப முரண்கள் ஒவ்வொன்றும் ஆதிக்கம் செலுத்தும். அதிலே மிகவும் ஆதிக்கம் செலுத்துகிற முரண்பாடுகளாக ஒவ்வொரு இயக்கமும் அவரவர் பார்வையிலிருந்து வரையறை செய்வார்கள். இந்துத்துவவாதிகளுக்கு சாதியும் பார்ப்பனியமும் ஒரு பிரச்சனையே கிடையாது. அதை ஒரு அடிப்படை முரண்களாகக்கூட அவர்களால் அங்கீகரிக்க முடியாது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு மக்கள்மன்றம் தோழர்களுக்கு இங்கே மேடையிலே அமர்ந்திருக்கின்ற இயக்கங்களின் தலைவர்களுக்கு பார்ப்பனியம் தான் முதன்மையான முரண்பாடு. சாதி என்பது தான் இங்கிருக்கின்ற சிக்கல்களில் முதன்மையான சிக்கல்.

 

 

#புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் தந்தைபெரியார் அவர்களும் இங்கு நிலவிய சமூகச் சிக்கல்களை அடிப்படையாகக்கொண்டு முதலாளித்துவத்தை பார்க்கிறார்கள். எனவே அம்பேத்கரியம் மார்க்சியத்திலிருந்து மாறுபட்டதல்ல. பெரியாரியம் மார்க்சியத்திலிருந்து முரண்பட்டதல்ல. தொழில்சார்ந்த முதலீடுகளுக்கு இங்கே சாதி தான் தகுதியாக இருக்கின்றது. இந்தியாவில் அடிப்படையில் சாதி தான் முதலாளியமாக இருக்கின்றது. இந்திய மண்ணில் அடிப்படையிலே இந்துத்துவம் தான் முதலாளியமாக இருக்கின்றது. சாதியம் இந்துத்துவம் என்றெல்லாம் நாம் அழைக்கிற இந்தச் சொற்றொடரின் கருவாக NUCLEUS-ஆக இருப்பதுதான் பார்ப்பனியம். BRAHMINISM என்பதுதான்.

இந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராக விளிம்புநிலை மக்களுக்கெதிராக கோட்பாட்டு ரீதியிலான இரண்டு எதிரிகள் பகைசக்திகள் ஒன்று பார்ப்பனியம் இன்னொன்று முதலாளியம் என்று புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார். மார்க்சியம் என்பது தொழிலாளர்களைப் பற்றி அவர்களுடைய விடுதலையைப் பற்றி அவர்களின் தலைநிமிர்வைப் பற்றி போராடுகிற கோட்பாடு என்று நாம் புரிந்துகொண்டாலும் அந்தத் தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி சுரண்டிக் கொண்டிருக்கின்ற முதலாளியத்தை வீழ்த்துவது என நாம் புரிந்து கொண்டாலும் இந்திய மண்ணோடு பொறுத்திப்பார்க்கும் போது இங்கே முதலாளித்துவம் என்பது இந்துத்துவமாகவும் பார்ப்பனியமாகவும் இருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

#மக்கள்மன்றம் மே தின பொதுக்கூட்டத்தில் தலைவர் அவர்கள் உரை, காஞ்சிபுரம்.