சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் பலியானார்கள். காயமடைந்த 5 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறறு வருகின்ற னர்.இவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்திவரும் கச்ச நத்தம் கிராம மக்களையும் சந்தித்து பேசினார்.

 

முன்னதாக தலைவர் தொல் .திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளது. இதுபோதாது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியும் வழங்க வேண்டும்.

 

வன்முறையை தடுக்க தவறிய பழையனூர் காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் மட்டும் செய்தது போதாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

வன்கொடுமை பாதுகாப்பு சட்டம் கடுமையாக இருந்தவரை தலித்துகள் மீதான வன்முறை குறைந்து இருந்தது. தற்போது இந்த சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நீர்த்துப்போய் உள்ளது. மோடி அரசு இதற்கு மாற்றாக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.