——————
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, உயர்நிலைக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் 14-06-2018 வியாழக்கிழமையன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1. தூத்துக்குடி படுகொலை: தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் !
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிலையாக மூட வலியுறுத்தி கடந்த ஏப்ரல் – 22 அன்று நடந்த மாபெரும் மக்கள்திரள் பேரணியைச் சிதறடிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரைப் படுகொலை செய்த தமிழக அரசின் ஒடுக்குமுறையைக் கண்டித்தும் அந்தக் கொடூரமான திரள்படுகொலை வழக்கை மையப் புலனாய்வு விசாரணைக்கு(சிபிஐ) உட்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் கட்சி அடிப்படையில் பிரிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் வரும் 22-06-2018 அன்று மகத்தான ஆர்ப்பாட்டம் நடத்துவென இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

2. நீட் தேர்வு- மாணவியர் பலி: சென்னையில் ஆர்ப்பாட்டம்!
“நீட்’ தேர்வு முறையால் மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவ- மாணவியர் பலரும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே பலியான அனிதாவைத் தொடர்ந்து தற்போது செஞ்சி பிரதீபா மற்றும் திருச்சி சுபஶ்ரீ ஆகியோர் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டுள்ள பேரவலம் நடந்தேறியுள்ளது. அத்துடன், செஞ்சி கீர்த்திகா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தப்பிப் பிழைத்துள்ளார். புது தில்லியிலும் ஒரு மாணவி எட்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில், நீட் தேர்வை அகில இந்திய அளவில் கைவிட வேண்டுமெனவும் கல்வித் தொடர்பான அதிகாரங்களை பொதுப் பட்டியலிலிருந்து விலக்கி மாநிலப் பட்டியலில் இணைக்க வலியுறுத்தியும் வரும் 02-07-2018 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

3. மறுசீரமைப்பு : நெறியாளர்கள் சந்திப்பு !
கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் மாவட்டந்தோறும் எவ்வாறு மேம்பட்டுள்ளன என்பது குறித்து கலந்தாய்வு செய்வதற்கான நெறியாளர்களின் கூட்டம் 26-06-2018 அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

4. இளஞ்சிறுத்தைகள் சிக்கல்: ஐவர் கொண்ட விசாரணைக் குழு
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் செயல்திட்டங்களை வரையறுப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக அண்மையில் மாநில செயலாளர்கள் ம.சங்கத்தமிழன் அவர்களுக்கும் குடந்தை தமிழினி அவர்களுக்கும் இடையில் உருவான கருத்து முரண்பாடுகளையொட்டி, முதன்மைச் செயலாளர் உஞ்சைஅரசன் அவர்கள் தலையிட்டு மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து உஞ்சை அரசன் அவர்களுக்கும் குடந்தை தமிழினி அவர்களுக்குமிடையில்
நிகழ்ந்த உரையாடல்கள் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவித்துள்ளன.

எனவே, இது குறித்து விரிவாக விசாரிக்கும் வகையில் கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர்கள், அரசியல்குழுவின் மாநில செயலாளர் மற்றும்
ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மாநில செயலாளர் ஆகிய ஐவரைக் கொண்ட விசாரணைக் குழு, மேற்கண்ட மூன்று பொறுப்பாளர்களையும் விசாரிக்குமெனவும் முதல்அமர்வு வரும் 20-06-2018 அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுமெனவுமவும் இவ்விசாரணை முடியும் வரையில் கட்சித் தலைவரின் வழிகாட்டுதலின்படியே பாசறையினர் செயல்படவேண்டுமெனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது .

பாசறையின் நிர்வாகம் தொடர்பாக மாற்றங்கள் ஏதும் மேற்கொள்ள வேண்டிய தேவையிருப்பின் அது குறித்து தலைவர் அவர்களே முடிவு செய்வாரெனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது .

இவண்:
தொல். திருமாவளவன்
நிறுவனர்- தலைவர்-விசிக.