உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை இம்பீச்மெண்ட் முறையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளும் இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும் என தெரிவித்தார். உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் அரசியில் தலையீடு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது என்றும் நீதியின் கடைசி அரண் இந்த பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது வேதனைக்குரியது என்றும் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளால் புகாருக்கு ஆளான தலைமைநீதிபதி தீபக் மிஸ்ராவை இம்பீச்மெண்ட் முறையில் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நிறுத்தி விசாரிக்க வேண்டும்என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

நாட்டில் சங்பரிவார் அமைப்புகளின் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் மதவாத சக்திகளை ஒடுக்குவதற்கு ஜனநாயக சக்திகள் ஒன்றிணையவேண்டும் என்றும் விசக தலைவர் தொல் திருமாவளவன் கேட்டுக்கொண்டார். இஸ்லாமியர்களுக்கான ஹஜ் மானியம் ரத்து என்பது திட்டமிட்ட ஒடுக்குமுறை நிகழ்வாகும் என்றும் மத்தியஅரசின் இந்த நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இஸ்லாமியர்களுக்கு மீண்டும் மானியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தனார்.

வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் தொடர் மரணங்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்களின் மரணத்துக்கு தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கூறினார்.விரைவில் கர்நாடக சட்டபேரவைக்கு தேர்தல் வர உள்ள நிலையில் அந்த மாநில முதலமைச்சர் காவிரி நீரை முன்னிறுத்தி அரசியல் செய்து வருவது கண்டனத்துக்கு உரியது என்றும் அவர் தெரிவித்தார். பெரியார் விருது அமைச்சர் வளர்மதிக்கு வழங்கப்பட்டு இருப்பது அவரது நற்பெயருக்கு ஊறு விளைவிப்பதாகும் என்றும் இதற்கு முதலமைச்சர் பழனிச்சாமிதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

நடிகர்கள் மக்கள் பணியாற்றுவதற்காக அரசியலுக்கு வருவது வரவேறகத்தக்க ஒன்று என தெரிவித்த தொல்.திருமாவளவன் தற்போது அரசியல் களத்தை அவர்கள் ஒரு சந்தைபோன்று மதிப்பிட்டு நடந்துவருவதால் பொதுமக்கள் அவர்களின் திட்டத்தை உணர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.